மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும்:அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை-விழுப்புரம் கலெக்டர் பழனி சிறப்பு பேட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும் என்றும், அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பழனி கூறினார்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும்:அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை-விழுப்புரம் கலெக்டர் பழனி சிறப்பு பேட்டி
Published on

கலெக்டர் பேட்டி

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விழுப்புரம் திரும்பிய மாவட்ட கலெக்டர் சி.பழனி, தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.24 கோடி கல்விக்கடன்

தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களை விட விழுப்புரம் மாவட்டத்தில் 'நம்மை காக்கும் 48' என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றவியல் நடவடிக்கை

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை பேணிக்காப்பது முதல் இலக்கு எனவும், பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது இரண்டாவது இலக்கு எனவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2023-ம் நிதியாண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 66 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு தீருதவித் தொகையாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரத்து 750, எவ்வித நிலுவையுமின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களில் 4 பேருக்கு அரசு பணியும், புதியதாக விழுப்புரம் வேளாண்மைத்துறை அலகில் ஒருவருக்கு இளநிலை உதவியாளர் அரசுப்பணியும், இதுதவிர 3 குடும்பங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை அலகில் இளநிலை உதவியாளர் பணி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை பரப்புவோர் மீது காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு உரிய கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை

கல்வியில் பின்தங்கிய நமது மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் விதமாக கல்வித்துறை அதிகாரிகளுடன் உரிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது தலைமை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கூட்டங்கள் நடத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனுக்களுக்கு விரைவில் தீர்வு

மேலும் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்யும்பொருட்டும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அந்தந்த துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 64 ஆயிரம் பேர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வைத்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுகின்றனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.24 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களாக 1 லட்சத்து 89 ஆயிரம் பேரும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 92 ஆயிரம் பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 74 ஆயிரம் பேரும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் ஏராளமாக கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் சி.பழனி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com