இரவில் வலம் வரும் மரநாய்

தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது.
இரவில் வலம் வரும் மரநாய்
Published on

தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாக தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது. தென்னை மரங்களில் உள்ள இளநீரை மட்டுமே மரநாய்கள் குடிக்கின்றன. தென்னங்குலைகளில் இளநீரில் வழுக்கை உருவாகும் 7-வது மாதத் தொடக்கத்தில் தன் கூரிய பற்களால் வட்டமாக துவாரமிட்டு கடைசி சொட்டு இளநீர்வரை பாளையிலேயே வைத்துக் குடித்து விடுகின்றன. சுமார் 8- 10 அடிகூட எளிதில் தாவி, அடுத்த மரத்தின் மட்டையை பிடித்துவிடும். மரத்திலிருந்து இறங்கிவர நேர்ந்தால் தலைகீழாக இறங்கும். தாவிக் குதிக்க, எளிதில் மரமேறுவதற்கு உதவும் வகையிலும் மரநாயின் கால்கள் அமைந்துள்ளன. வால் பகுதி சமநிலைப்படுத்தி கொள்ளவும், கூரிய பற்கள் காய்களை எளிதில் துவாரமிடவும் உதவுகின்றன. இரவு வாழ்க்கைக்கு உதவும் பார்வைத்திறன் மிகுந்த கண்கள், கடும் இருட்டிலும் பார்க்கும் சக்தியை இவற்றுக்கு அளிக்கின்றன. ஒரு நாயை போல் மோப்ப சக்தி கொண்டிருப்பதால் சரியான பக்குவத்தில் இளநீர் குலைகளை இது கண்டுகொள்ளும்.

மிகுந்த கூச்சச் சுபாவம் கொண்டவை. மனிதர்களை கண்டால் அறவே பிடிக்காது. பகலில் மரத்தின் கொண்டைப் பகுதிக்குள் படுத்து இவை தூங்கிவிடும். இரவில் நடமாடும்போதுகூட இவற்றின் சுவாசம் மேலடுக்கு காற்றோடு கலந்து சென்றுவிடுகிறது. தவறுதலாக சிறு சத்தம்கூட எழுப்புவதில்லை. மரநாய்கள் எல்லா ரக தென்னையின் இளநீர் குலைகளையும் கடித்துச் சேதப்படுத்தும். ஆனால், தென்னை மரங்களில் ஏற்படும் எல்லா தாக்குதல்களும் மரநாய்களால் மட்டும் ஏற்படுவதல்ல. பழந்தின்னி வவ்வால்கள், மர எலிகள், அணில்களாலும் மரத்துக்கு சேதம் ஏற்படும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காடுகளில் காட்டு மரங்களில் ஆண்டுதோறும் கிடைக்கும் பல பழ வகைகள் என்னென்ன என்பது, அங்கு வாழும் மரநாய்களுக்கு நன்கு அத்துப்படி. எந்த வகை மரம், எங்கு, எந்த மாதங்களில் பழம் கொடுக்கும் என்பது இவ்விலங்குகளிடம் பதிந்து போயுள்ளது.

நமது நாட்டில் தென்னையை பெரும்பாலும் தனிப் பயிராக வளர்ப்பதால் காட்டு மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. அதனால் மாற்று உணவு கிடைக்காமல் மரநாய்கள் தென்னையையே முற்றிலுமாக சார்ந்திருக்கின்றன. விவசாயிகள் மரநாய்களின் தாக்குதலை சமாளிக்க உணவில் நஞ்சு கலந்து மரங்களில் வைத்து விடுகின்றனர். அவற்றை பெரும்பாலும் மரநாய்கள் உண்பதில்லை. மாறாக அணில், எலி, மயில், பருந்து போன்ற உயிரினங்கள் தவறுதலாக உண்டு இறந்து விடுகின்றன. கூண்டுப்பொறி வைத்து இதை சிலர் பிடித்து விடுகின்றனர். இவை அரிய வகை உயிரினங்களாக பட்டியலிடப்பட்டு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரினங்களை அழிப்பது தண்டனைக்குரிய குற்றமும்கூட.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com