புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் ஐகோர்ட்டில், மத்திய அரசு வாதம்

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதாக எடுத்துள்ள முடிவு சட்டவிரோதம் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் ஐகோர்ட்டில், மத்திய அரசு வாதம்
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த புதிய சட்டத்தின்படி, மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. இதேபோல, புதுச்சேரி மாநில அரசும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவையில் முடிவு செய்து தீர்மானம் இயற்றியது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதையடுத்து இந்த இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரியை சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சட்டவிரோதம்

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், புதுவை அமைச்சரவையின் இந்த முடிவு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும். இதேபோல, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றாலும், அதுகுறித்து மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியதும், புதுச்சேரி அரசு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, அமைச்சரவையில் தீர்மானம் இயற்றியுள்ளது. இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்பதால், அந்த தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று கூறினார்.

சமூக நீதி

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தன் வாதத்தில், அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிரான நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுபோன்ற உள்ஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதுச்சேரி அரசு எடுத்துள்ள இந்த முடிவை சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூற முடியாது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, சமூக நீதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கும் எதிராக உள்ளது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.புகழேந்தி, விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com