12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே மே மாதம் சம்பளம் வழங்க ஆணையிட வேண்டும் - விஜயகாந்த்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்குவதோடு, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே மே மாதம் சம்பளம் வழங்க ஆணையிட வேண்டும் - விஜயகாந்த்
Published on

சென்னை,

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்குவதோடு, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருப்பது மனிதநேயம் ஆகாது. உணவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு வேலையில் சேர்ந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் மறுப்பது சமூக நீதி இல்லை. 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களின் கஷ்டத்தை போக்கிட உடனே மே மாதம் சம்பளம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும். பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மே மாதம் சம்பளம் வழங்குவதோடு, பணிநிரந்தரம் அறிவிப்பை வெளியிட்டு, திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

12 ஆண்டுகளாக தற்காலிகமாகவே பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிவதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதும் 10 ஆயிரம் சம்பளம் தான் கிடைக்கிறது என்பது இன்றைய காலகட்டத்தில் போதுமா என்பதை தமிழக முதல்வர் நினைத்து பார்த்து, கருணை கொண்டு தாயுள்ளதோடு 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com