கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

கோப்புப்படம்
கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மோத்திரப்பசாவடி, ஏஞ்சல் நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சுகந்தி (58 வயது). இவர் அம்மாப்பேட்டை அருகே குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் சுகந்தி வேலை முடிந்து மாலை 4.30 மணியளவில் குளிச்சப்பட்டு-ஞானம் நகர் செல்லும் சாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
குளிச்சப்பட்டு அய்யனார் கோவில் அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சுகந்தியின், ஸ்கூட்டரை மறித்தார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அருகில் நிறுத்தி இருந்த பைக்கில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து சுகந்தி அளித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.






