

வேலூர் மூலைக்கொல்லை தென்றல்நகரை சேர்ந்தவர் பாலசுந்தர் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு வழக்கம்போல் தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் பார்த்தபோது ஆட்டோ திருட்டு போயிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுந்தர் பல்வேறு இடங்களில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில் 2 வாலிபர்கள் ஆட்டோவை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்களின் புகைப்படங்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் ஆட்டோவை திருடியது வேலூர் சலவன்பேட்டை பாரதியார்நகரை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஹரிஸ்குமார் (வயது 20), ஓல்டுடவுன் பில்டர்பெட் மேட்டுதெருவை சேர்ந்த பாபு மகன் பிரகாஷ்ராஜ் (19) ஆகியோர் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மூலைக்கொல்லை மலையில் உள்ள கோவில் அருகே பதுக்கி வைத்திருந்த ஆட்டோ மீட்கப்பட்டது.