நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 பவுன் நகைகள் கையாடல்

காரையூர் அருகே நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 பவுன் நகைகளை கையாடல் செய்த செயலாளர், நகை மதிப்பீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 பவுன் நகைகள் கையாடல்
Published on

காரையூர்:

கூட்டுறவு கடன் சங்கம்

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த 4 பவுன் நகையை மீட்க வந்த போது, அந்த நகை காணாமல் போயிருந்தது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் அதற்கு பதிலாக மாற்று நகையை வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நகை பெற்றுக்கொண்ட கிருஷ்ணன் அந்த சங்கத்தில் அடகு வைத்த மற்ற நபர்களின் நகைகளும் காணாமல் போய் இருக்கலாம் என்று எண்ணி நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நல்லூர், நெருஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் அடகு வைத்த நகைகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ளதா? என்று பரிசோதித்து கொள்ளுங்கள் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

20 பவுன் நகைகள் கையாடல்

இதைதொடர்ந்து கடந்த 31-ந்தேதி முதல் 2 நாட்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிகாரிகள் நகைளை சரிபார்த்தனர். அப்போது கடன் சங்கத்தில் இருந்து 20 பவுன் தங்க நகைகள் கையாடல் செய்திருப்பது தரியவந்தது. மேலும் விசாரணையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை மதிப்பீட்டாளராக உள்ள சாமிநாதன் என்பவர் தனது சொந்த காரணத்திற்காக தனியார் வங்கியில் 20 பவுன் தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அறந்தாங்கி சார்பதிவாளர் முருகேசன் காரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், சாமிநாதன், கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் சங்கிலி ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செயதனர்.

2 பேர் பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 20 பவுன் தங்க நகைகளை தனது சொந்த தேவைக்காக தனியார் வங்கியில் அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன், இதற்கு உடந்தையாக இருந்த செயலாளர் சங்கிலி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தலைமறைவான சாமிநாதன், சங்கிலி ஆகிய 2 பேரையும் காரையூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com