குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் - அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது. இந்த தீ விபத்தில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் - அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு
Published on

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கலைஞர் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிறிய அளவிலான குடிசை வீடுகளில் வடமாநிலம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இங்கு வசிக்கும் ராஜாராம் என்பவரது வீட்டில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அந்த வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியபடி பறந்ததால் அதன் அருகில் இருந்த மற்ற குடிசைகளின் மீதும் தீப்பொறி விழுந்தது. இதனால் அடுத்தடுத்து 23 வீடுகளில் தீயானது பரவி கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி சிதறி ஓடினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 23 குடிசை வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. நல்லவேளையாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

பாதிக்கப்பட்டவர்களை தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு வீடுகள் புதிதாக கட்டுவதற்கும் நிதி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com