ஒரு வருட கால நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 4 குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைப்பு - ஜாமீனில் வெளியே வர முடியாது

ஒரு வருட கால நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 4 குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களால் ஜாமீனில் வெளியே வர முடியாது.
ஒரு வருட கால நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 4 குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைப்பு - ஜாமீனில் வெளியே வர முடியாது
Published on

சென்னை தியாகராயநகர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (வயது 21). இவர் மீது மாம்பலம் போலீஸ் நிலையத்தில் 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற சாமான் சதீஷ் (29) மீதும் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர்களில் ரமேஷ்குமார் 26-10-2021 அன்றும், சதீஷ் 17-6-2022 அன்றும் மாம்பலம் துணை கமிஷனர் முன்பு ஆஜராகி, தாங்கள் திருந்தி வாழப்போவதாகவும், ஒரு வருட காலத்துக்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டோம் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தனர்.

ஆனால், ரமேஷ்குமார், சதீஷ் ஆகியோர் 7-8-2022 அன்று சரவணன் என்பவரை கத்தியால் தாக்கி பணம் பறித்து சென்றது தொடர்பாக, மாம்பலம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், சென்னை தியாகராயநகர் கண்ணம்மா பேட்டையை சேர்ந்த ஸ்ரீஹரி (20), கிஷோர் (20) ஆகியோரும் கைது செய்யப்பட்டு இருந்தனர். ஏற்கனவே, ஸ்ரீஹரி மீது ஒரு குற்ற வழக்குகளும், கிஷோர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட 2 குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்தது.

இதில், ஸ்ரீஹரி கடந்த 13-6-2022 அன்றும், கிஷோர் 13-7-2022 அன்றும், தாங்கள் திருந்தி வாழப்போவதாகவும், ஒரு வருட காலத்துக்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டோம் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.

ஆனால், இருவரும் 10-8-2022 அன்று சரவணன் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக, மாம்பலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரமேஷ்குமார், சதீஷ், ஸ்ரீஹரி, கிஷோர் ஆகியோர் தாங்கள் எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி, மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால், நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, ரமேஷ்குமார் 80 நாட்கள், சதீஷ் 313 நாட்கள், ஸ்ரீஹரி 306 நாட்கள், கிஷோர் 336 நாட்கள் ஜாமீனில் வர முடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com