

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு சிலிண்டர்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துவதற்காக, தமிழக அரசு உத்தரவின் பேரில் தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை எந்த மருத்துவமனைக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த குழு முடிவு செய்யும் என்றும் தேவை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகாதாரத்துறையால் அமைக்கப்பட்ட வார் ரூம் எனப்படும் கட்டளை மையத்துடன் இணைந்து இந்த குழு செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.