பஸ்வசதி இல்லாததால் 4 கிராமமக்கள் அவதி

திருக்குவளை அருகே பஸ்வசதி இல்லாததால் 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் நடந்து பள்ளிக்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
பஸ்வசதி இல்லாததால் 4 கிராமமக்கள் அவதி
Published on

திருக்குவளை அருகே பஸ்வசதி இல்லாததால் 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் நடந்து பள்ளிக்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

பஸ்வசதி இல்லை

நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா மேலவாழக்கரை ஊராட்சியில் ஏர்வைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி, ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 4 கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவ, மாணவிகள் மேல்நிலை பள்ளிப்படிப்புக்காகவும் அருகில் உள்ள திருக்குவளைக்கு சென்று வருகின்றனர்.

ஏர்வைக்காடு, ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டிருப்பு ஆகிய கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் நாகை, திருவாரூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருக்குவளைக்கு நடந்து வந்து பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாணவ-மாணவிகள் சிரமம்

பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். கடும் வெயிலில், சைக்கிளில் சென்று வருகின்றனர். மேலும் அருகில் உள்ள ஊர்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், உபகரணங்களை தலையில் சுமந்து செல்கின்றனர். இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து ஏர்வைக்காடு, ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

பெண்கள் அச்சம்

எங்கள் கிராமங்களுக்கு பஸ்வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து திருக்குவளைக்கு சென்று, அங்கிருந்து பஸ் ஏறி செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கும் செல்லும் தொழிலாளர்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து செல்லும் பெண்களும் அச்சப்படுகின்றனர். பஸ்வசதி இல்லாத எங்கள் கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

ஊரை காலி செய்கின்றனர்

பெரும்பாலானோர் ஊரையே காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பு தங்கள் பகுதிக்கு இயக்கப்பட்ட மினிபஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயண சலுகை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பெண்களும், மாணவ - மாணவிகளும் பெரிதும் பயனடைவார்கள். எனவே ஏர்வைக்காடு, ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டிருப்பு ஆகிய கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com