ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் - தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது.

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிகளின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com