

சென்னை,
சென்னை உணவு வங்கி நிகழ்ச்சியின் 25-வது ஆண்டு விழாவை, ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாட ராஜஸ்தான் இளைஞர் சங்கம் முடிவு செய்தது. அதன்படி சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 7 வயது முதல் 13 வயது வரையிலான 77 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 77 குழந்தைகளும் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். பெங்களூருவில் பன் ஐலாண்டு, ஸ்நோ வேர்ல்டு போன்ற கேளிக்கை பூங்காக்களுக்கு சென்றும் விளையாடியும், சுவையான உணவுகள், உயர்வகை நொறுக்குத்தீனிகள் முதலியவற்றை உண்டும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் நிர்வாகி ராஜேஷ் கோத்தாரி கூறுகையில், கல்வி, விளையாட்டு, கலைகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் ஆதரவற்ற ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டோம். வானத்தில் செல்லும் விமானத்தை பார்த்து வியந்தவர்களுக்கு, அந்த விமான பயணத்தையை அனுபவிக்க செய்திருக்கிறோம். குழந்தைகளின் விமான கனவை நிஜமாக்குவதற்காகவே இந்த முயற்சி. முதல் விமான பயணத்தை குழந்தைகள் உற்சாகமாக அனுபவித்தனர், என்றார்.