90 சதவீத தொண்டர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர்- பாமக எம்.எல்.ஏ பேட்டி

டாக்டர் ராமதாசுடன் சதித்திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்று சிவக்குமார் எம்.எல்.ஏ கூறினார்.
விழுப்புரம்,
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் பா.ம.க.சார்பில் சார்பில் வருகிற 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தை விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவகுமார் எம்.எல்.ஏ.பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என டாக்டர் ராமதாஸ் கூறிவிட்டார். டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டது குறித்து நாங்களும் விசாரணை செய்ய கூறியுள்ளோம். அதை யார் வைத்தார்கள் என கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த கருவியை 10 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் போட வேண்டும் என்கின்றனர். அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு 1½ மாதத்திற்கு முன்பு தான் வந்தார். அப்படி என்றால் 10 நாட்களுக்கு ஒருமுறை கருவிக்கு யார்? சார்ஜ் போட்டது. 90 சதவீத தொண்டர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பக்கம் உள்ளனர். டாக்டர் ராமதாசுடன் சதித்திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர். எங்கள் வழிகாட்டி டாக்டர் ராமதாஸ். கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி. பொதுக்குழு கூட்டும் அதிகாரம் டாக்டர் அன்புமணியிடம் உள்ளது என்றார்.






