தொழிலாளியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது

தொழிலாளியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
Published on

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கோடிதிப்பை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31), தொழிலாளி. இவர், அவரது நண்பருடன் அந்த பகுதியில் உள்ள ஒத்தையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பாதையை மறித்தபடி மோட்டார் சைக்கிளை நிறுத்துவிட்டு மங்கலத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலங்குணம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், மங்கலம் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஓரமாக அமர்ந்து மது அருந்துமாறு செல்வகுமார் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேரும் செல்வகுமார் மற்றும் அவரது நண்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த மங்கலத்தை சேர்ந்த அஜித்குமார், மருதநாயகம், மணியரசன் ஆகியோரும் அவர்கள் இருவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த செல்வகுமாரின் உறவினர்களிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அவர்கள் செல்வகுமார் தரப்பினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம், பிரகாஷ், தியாகராஜன், அஜித்குமார், மருதநாயகம், மணியரசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் மணியரசன் என்பவர் சென்னை ஆவடியில் பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com