சமுதாயக்கூடம், நூலக கட்டிடத்தில் இயங்கும் தொடக்க பள்ளி

சீர்காழி அருகே சமுதாயக்கூடம் மற்றும் நூலக கட்டிடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
சமுதாயக்கூடம், நூலக கட்டிடத்தில் இயங்கும் தொடக்க பள்ளி
Published on

சீர்காழி:

சீர்காழி அருகே சமுதாயக்கூடம் மற்றும் நூலக கட்டிடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

சமுதாயக்கூடத்தில்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தனியார் ஓட்டு வீட்டில் செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் மானாதந்திருவாசல், திருப்புன்கூர், நரிமுடுக்கு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாததால் சம்பந்தப்பட்ட தனிநபர், கடந்த 2005-ம் ஆண்டு பள்ளியை தமிழக அரசு வசம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதியும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றும் அப்போதைய அரசு தற்காலிகமாக திருப்புங்கூர் சமுதாயக்கூடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.

நூலக கட்டிடத்தில்...

ஆனால் அந்த சமுதாய கூடத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ஆசிரியர், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி கல்வி கற்றுத்தருவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியிலேயே சேர்ந்ததால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன் காரணமாக சமுதாயக்கூடத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையும், சமுதாயக்கூடம் பின்புறமுள்ள நூலக கட்டிடத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடக்கப்பள்ளியில் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லை

மேலும் இருக்கைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்து அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், திருப்புங்கூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய கூடத்திலும், நூலக கட்டிடத்திலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குறைவான ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.

மேலும் போதிய அடிப்படை வசதி இல்லாததால் வெயில் மற்றும் மழைக் காலங்களில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com