அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டம்
Published on

குடியேறும் போராட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தேனி வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் 110 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு இருதரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தனர்.

இதனையடுத்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பினருக்கும் தலா 55 வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தங்களுக்கு ஒதுக்கிய 55 குடியிருப்புகளையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

தள்ளுமுள்ளு

அதன்படி வன வேங்கைகள் கட்சியின் நிறுவன தலைவர் இரணியன், பொதுச்செயலாளர் உலகநாதன் ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் நேற்று திரண்டு வந்தனர்.

அடுப்புகள், சமையல் பாத்திரங்கள், அரிசி, போர்வை உள்ளிட்டவற்றை அவர்கள் கொண்டு வந்தனர். அவர்களை, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கேயே சாலையோரம் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அடுப்புகளில் பாத்திரங்களை வைத்து, சமையல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே போராட்டம் நடத்திய மக்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முற்றுகையிட்டு போராட்டம்

கலெக்டர் அலுவலகத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

1 மணி நேரத்துக்கும் மேல் போராட்டம் நீடித்த நிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com