அகழாய்வு பகுதிக்கு செல்ல தார்ச்சாலை அமைக்க வேண்டும்

விஜயகரிசல்குளம் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு செல்ல தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகழாய்வு பகுதிக்கு செல்ல தார்ச்சாலை அமைக்க வேண்டும்
Published on

தாயில்பட்டி, 

விஜயகரிசல்குளம் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு செல்ல தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காட்சி

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அகழாய்வு நடைபெறும் இடத்தின் அருகில் முதல் கட்ட அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் அப்பகுதியில் தொல்லியல் துறை சார்பில் தொல்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த கண்காட்சியை காண அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் வந்து செல்கின்றனர்.

சேதமடைந்த சாலை

அவ்வாறு செல்வோர் வெம்பக்கோட்டையில் இருந்து அருங்காட்சியகம் செல்வதற்கு 2 கி.மீ. தூரம் மெட்டல் ரோடு வழியாக தான் செல்ல வேண்டும். இந்த சாலை பராமரிக்கப்படாததால் மேடும், பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் அப்பகுதி மக்கள் அந்த சாலையின் இருபுறமும் குப்பைகள் மற்றும் கழிவுகளை ஆங்காங்க கொட்டி செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் சிலர் அங்கு மது அருந்திவிட்டு மது பாட்டில்களை சாலையில் வீசிவிட்டு செல்கின்றனர். ஆதலால் மேற்கண்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com