வீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
வீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்
Published on

திருமங்கலம், 

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

உறவினர் போல நடித்து...

திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜா மகன் நல்லையன் (வயது 34). இவர் ராஜபாளையத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வைஜெயந்தி ஆலம்பட்டி கிராமத்தில் பேப்பர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.வீட்டில் இளைய மகள் சத்யா(10) மட்டும் தனியாக இருந்துள்ளார்.இதனை அறிந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சத்யாவிடம் தான் உன்னுடைய உறவினர் என்று கூறி தன்னை காட்டிக் கொண்டார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அந்தப் பெண் கழிவறைக்கு செல்ல வேண்டும் என சத்யாவிடம் கூறியுள்ளார். சத்யாவும் வீட்டிற்குள் அந்த பெண்ணை கழிவறைக்கு செல்ல அனுமதித்துள்ளார்.

நகை, பணம் திருட்டு

மேலும் சத்யாவை சாப்பாடு பார்சல் வாங்கி வருமாறு அந்த பெண் கூறியுள்ளார். சத்யாவும் அருகில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்று உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த பெண் வீட்டின் பீரோவில் இருந்த நகையை திருடிக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்றார். சாப்பாடு வாங்கிட்டு வந்த சத்யாவிடம் பார்சலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சத்யா வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை அந்த பெண் திருடி சென்றது தெரிய வந்தது.உடனே பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.

இவருடைய தந்தை நல்லையன் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர் போல சிறுமியிடம் நடித்து நகை, பணத்தை திருடிய பெண்ணை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com