கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்

கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டு அறிந்தார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்
Published on

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 12-ந் தேதி புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. உடனடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலால் உயிரிழப்புகளும், உடைமைகளும் சேதமடையாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சுழன்று பணியாற்றினர்.

புயல் தொடர்பான அனைத்து தகவல்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து உடனுக்குடன் முதல்-அமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இதனால் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் புயல் கரையை கடந்தபோது பெரும் அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கஜா புயல் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கஜா புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கஜா புயல் குறித்த விவரங்களை தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். கஜா புயல் குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புயலுக்கு பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com