குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான கட்டிடம் கடந்த 1994-ம் ஆண்டு உஷா என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை ஸ்ரீதர் என்பவர் ரூ.26 லட்சத்துக்கு வாங்கி உணவகம் நடத்தி வந்த நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டார்.

இதையடுத்து அந்த நிலத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தரக்கோரி ஸ்ரீதரின் மனைவி உமா மகேஸ்வரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 1994-ம் ஆண்டு உஷா என்பவருக்கு இந்த கட்டிடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யவில்லை.

பெயர் மாற்றம்

இந்தநிலையில், சொத்து ஒதுக்கீட்டு ஆவணத்தில், உஷாவின் பெயர் நீக்கப்பட்டு, உமா மகேஸ்வரியின் பெயர் கடந்த 2004-ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் உள்பட பலர் முறைகேடு செய்துள்ளனர். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுப்பது தான் இந்த வாரியத்தின் பணி. ஆனால், நீண்ட காலமாக வாரியத்தின் மீது ஏராளமான புகார்கள் வருகின்றன.

மக்களின் நம்பிக்கை

அரசியல் தொடர்பு, ஆள் பலம் உள்ளவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக அதிகாரிகள் இதுபோல இடத்தை வழங்குகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத செயல் தொடர்ந்து நடந்தால், அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்ல, பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும்.

முதலில் ஒதுக்கீடு பெற்ற உஷாவின் பெயரும் ஆவணத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், அவரை ஒதுக்கீட்டாளராக கருத முடியாது. அவரிடம் கொடுத்த பணத்தை உமா மகேஸ்வரி சட்டப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம்.

தற்போது சட்டவிரோதமாக அங்கு கடை நடத்தி வரும் ஆக்கிரமிப்பாளர்களை 2 மாதத்துக்குள் அதிகாரிகள் வெளியேற்ற வேண்டும்.

நடவடிக்கை

இந்த விவகாரத்தில் முறைகேடு செய்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com