

செங்கோட்டை கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தம்பு. இவர் செங்கோட்டை அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகப் பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து அதன் பிறகு தென்காசி புதிய பஸ்நிலையத்தில் நேரக் காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் வழித்தடத்தில் மீண்டும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மீண்டும் தன்னை நேரக் காப்பாளர் பணிக்கு மாற்ற வேண்டுமென்று தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சட்டநாதன் என்பவரிடம் கூறினாராம். அதற்கு சட்டநாதன் மற்றும் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் ஆகியோர் தம்புவை அவதூறாக பேசியும், சாதியை கூறி தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செங்கோட்டை போலீசில் தம்பு புகார் செய்தார். அந்த புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று தம்பு மற்றும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 பேர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். இதை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.