கடன் வாங்கியதில் பிரச்சினை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார்

கடன் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கடன் வாங்கியதில் பிரச்சினை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார்
Published on

சென்னை,

பிரபல நடிகர் விஷால் சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரியிடம் நான் கடன் பெற்றிருந்தேன். அந்த கடனை முறையாக திருப்பி கொடுத்து விட்டேன்.

ஆனால் கடனுக்காக நான் அவரிடம் கொடுத்திருந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ஆர்.பி.சவுத்திரி திருப்பித்தரவில்லை. பல முறை கேட்டபோது தருவதாக காலம் கடத்தி வந்தார்.

நடவடிக்கை

தற்போது, எனக்கு திருப்பி தரவேண்டிய ஆவணங்களை காணவில்லை என்றும், தேடி கண்டுபிடித்து தருவதாகவும் சொல்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தரவேண்டிய ஆவணங்களை மீட்டுத்தருமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.சவுத்திரி விளக்கம்

நடிகர் விஷால் கொடுத்துள்ள புகார் மனு பற்றி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் விஷாலுக்கு இரும்புத்திரை என்ற படத்திற்காக நானும், பட அதிபர் திருப்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து கடனாக பணம் கொடுத்தோம். அந்த பணத்தை விஷால் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் கடனுக்காக விஷால் கொடுத்திருந்த ஆவணங்களை, திருப்பூர் சுப்பிரமணியம் வைத்திருந்தார். அவர் அந்த ஆவணங்களை தனது நண்பரும் சினிமா இயக்குனருமான சிவகுமாரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

சிவகுமார் திடீரென மரணம் அடைந்து விட்டார். விஷாலுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய ஆவணங்களை சிவகுமார் எங்கு வைத்திருந்தார், என்பதை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி விஷாலிடம் சொல்லி, வக்கீல் மூலம் ஆவணங்கள் காணாமல் போனது பற்றியும், விஷால் கடனை திருப்பி கொடுத்து விட்டார் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டோம் என்றும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டோம்.

இந்தநிலையில் விஷால் ஏன் போலீசுக்கு போனார் என்று தெரியவில்லை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆவணங்களை தொடர்ந்து தேடச்சொல்லி இருக்கிறேன். ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை பத்திரமாக விஷாலிடம் கொடுத்து விடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com