பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

விராலிமலையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
Published on

பஸ்களில் கூட்டம் அதிகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வடுகப்பட்டி, அளுந்தூர், நாகமங்கலம், நாஸ்ரேத் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். அதேபோல் விராலிமலையை சுற்றிலும் அதிக கம்பெனிகள் இருப்பதால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்களின் கூட்டமும் காலையில் அதிகமாக காணப்படும். அவ்வாறு செல்லும் மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். கூட்டம் எவ்வளவுதான் இருந்தாலும் அரசு பஸ்கள் கூடுதலாக இயக்குவதில்லை. இதனால் காலை நேரங்களில் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

படிக்கட்டுகளில் பயணம்

பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் வேறு வழியின்றி காலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உயிரை பணையம் வைத்து ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பயணம் செய்யும்போது பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் ஏறி இறங்கும் போது சில நேரங்களில் கீழே விழுந்து அவர்களுக்கு காயம் ஏற்படும் நிலையும் உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

எனவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யும் பயணத்திற்கு நிரந்தர தீர்வு காண காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com