வழக்கை ரத்து செய்யக்கோரிய மாரிதாஸ் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

வழக்கை ரத்து செய்யக்கோரிய மாரிதாஸ் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு.
வழக்கை ரத்து செய்யக்கோரிய மாரிதாஸ் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
Published on

மதுரை,

மதுரை திருப்பாலையைச் சேர்ந்த மாரிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து அதுசம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி இந்திய முப்படைத்தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகளை பதிவிட வேண்டாம் என டுவிட்டரில் தெரிவித்தேன்.

இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். என் மீது வழக்குப்பதிவு செய்வதிலும், கைது நடவடிக்கையிலும் சட்டத்தை பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, மனுதாரரின் டுவிட்டர் கணக்கை 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவரது டுவிட்டரில், முப்படை தளபதி குறித்த கருத்துகளின்போது, தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவர், தமிழகத்தின் நேர்மைத்தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். இது பிரிவினைவாதத்தை தூண்டக்கூடியது. எதன் அடிப்படையில் இந்த கருத்தை பதிவு செய்தார் என்று விசாரிக்க வேண்டி உள்ளது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணியசாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் போதும் சந்தேகம் எழுப்பப்பட்டதே? என்றார்.

பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கு உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. மனுதாரர் கைதாகி இருப்பதால், கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

மாரிதாஸ் மீது புகார் அளித்த பாலகிருஷ்ணன் சார்பில் ஆஜராகிய வக்கீல், தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்துகூற அவகாசம் கோரினார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com