உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
Published on

மகிழ்ச்சி திருவிழா

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி திருவிழாவாக கொண்டாட உள்ளனர். இதற்கான லோகோ வெளியிட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி லோகோவை வெளியிட்டார். விழாவில், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. 75-வது சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சி திருவிழாவாக கொண்டாட இருக்கிறது. நம்முடைய மாநில தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் 75 முக்கியமான இடங்களுக்கு செல்ல இருக்கிறார்கள். நான் வேலூருக்கு செல்ல இருக்கிறேன். மூத்த தலைவர் இல.கணேசன் திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்துக்கும், பொன் ராதாகிருஷ்ணன் வீரன் அழகு முத்துகோன் இல்லத்திற்கும், சி.பி.ராதாகிருஷ்ணன் தீரன் சின்னமலை பிறந்த இடத்திற்கும், எச்.ராஜா மருது சகோதரர்கள் வாழ்ந்த இடத்திற்கும், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கடலூரில் அஞ்சலை அம்மாள் நினைவு இடத்திற்கும் செல்ல உள்ளார்கள்.

அ.தி.மு.க. கூட்டணி

அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 1,104 இடத்தில் 15-ந்தேதி தேசிய கொடியேற்று விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த இடங்களில் மாணவர், மாணவியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியை ஏற்றுவார்கள். வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் மக்கள் ஆதரவை வேண்டி மத்திய இணை மந்திரி எல்.முருகன் யாத்திரை செல்ல உள்ளார். இந்த யாத்திரை கோவையில் ஆரம்பித்து நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் என 5 நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ளது.

கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் எந்த மாநிலத்தில் தேர்வு செய்யப்படுவார் என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும். உள்ளாட்சி தேர்தலுக்காக குழு அமைத்துள்ளோம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பயணிப்போம்.

பாராட்டு

முக்கிய பொறுப்புகளில் நல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தி.மு.க. அரசு பணி அமர்த்தியது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com