ஆயுர்வேத சிகிச்சை முடிந்து ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊர் திரும்பினார்; செல்லும் வழியில் கோவில்களில் சாமி தரிசனம்

கோவையில் 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று சொந்த ஊர் திரும்பினார். செல்லும் வழியில் அவர் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
ஆயுர்வேத சிகிச்சை முடிந்து ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊர் திரும்பினார்; செல்லும் வழியில் கோவில்களில் சாமி தரிசனம்
Published on

கோவை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 24-ந் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்தியசாலைக்கு சென்றார்.

அங்கு அவர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தங்கி கேரள ஆயுர்வேத முறையில் புத்துணர்வு பெறும் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டன.

3 நாட்கள் சிகிச்சை முடிந்தது

வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற அவர் பத்திரிகை மற்றும் டி.வி. நிருபர்களை சந்திக்கவில்லை. அத்துடன் அவர் கட்சி நிர்வாகிகளையும் அழைத்து பேசவில்லை. கட்சி நிர்வாகிகள் பலர் அவரை சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

இந்த நிலையில், 3 நாட்கள் சிகிச்சை முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 9.45 மணிக்கு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் வைத்தியசாலையில் உள்ள தன்வந்திரி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

செல்பி எடுத்தனர்

அப்போது அங்கு சிகிச்சை பெற வந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்ததும், ஓடிச்சென்று அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில குழந்தைகள் தங்கள் செல்போனில் அவருடன் நின்று செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் காரில் புறப்பட்ட அவர் கோவை அருகே ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தை சுற்றி வந்தார்.

வரவேற்பு

இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு முன்னாள் அமைச்சர் தாமோதரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கோவிலுக்கு சென்ற அவர், அங்கு அம்மனை தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கோவிலில் தங்கமலர் அர்ச்சனை செய்து, அம்மனை ஓ.பன்னீர்செல்வம் வழிபட்டார். கோவிலின் உள்புறத்தில் உள்ள அம்மன் பிரகாரத்தின் எதிரே அமர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்தார். அதன் பின்னர் கார் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com