மனித நேயமிக்க தலைவர்களே இப்போதைய தேவை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து

எம்.ஜி.ஆர். போன்ற மனித நேயமிக்க தலைவர்களே இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மனித நேயமிக்க தலைவர்களே இப்போதைய தேவை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து
Published on

சென்னை,

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது டுவிட்டர் பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-

எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.

மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏழைகளைப் பற்றிய அவரது இந்த கரிசனம் என்னை வெகுவாய் அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது. அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com