

சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மிகவும் வலிமையான அரசியல் கட்சியாக திகழ்ந்த அ.தி.மு.க.வை, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் ஆதிக்க சக்திகள் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்திருக்கும் அவலம் தற்போது ஏற்பட்டுள்ளது. தன் அடையாளத்தையும், தன் நிலைப்பாட்டையும் இழந்து, ஜெயலலிதா வகுத்த அரசியல் பாதையை மறந்துவிட்டு ஒரு சில சுயநலவாதிகளால் கழகம் சிக்குண்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தன் முகவரியை இழந்து, யாருக்கோ அடிமையாக மாறிப்போன அ.தி.மு.க.வின் அவலத்தை மாற்றி, மீண்டும் வீறுகொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை நிலைநாட்டவும், தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடும், சட்டத்தின் துணையோடும், அவதரித்த இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
இனி வரக்கூடிய காலம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.கவை மீட்டெடுக்கும் காலமாகவே அமைந்திடும். அதிகார மையத்தின் ஆதரவை மட்டுமே கொண்டு, வேறொருகட்சியின் நிலைப்பாட்டை, அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ளவைத்த இவர்களின் கொடுஞ்செயலை முடிவுக்கு கொண்டுவந்திடுவோம்.
ஜெயலலிதாவின் கொள்கைகளை மறந்த கூட்டத்தின் பிடியில் இருந்து அ.தி.மு.க.வை மீட்க உரிய சட்டப்போராட்டத்தை மிகத்தீவிரமாகவே நாம் மேற்கொண்டுவருகிறோம். நல்ல தீர்ப்பை நீதிமன்றம் சொல்லும் நல்லநாள் வந்தே தீரும்.
ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் இக்கொடியவர்களின் பிடியில் இருந்து சட்டப்பூர்வமாக மீட்போம். அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் ஒவ்வொருவரும் அ.தி.மு.க.வை மீட்கும் ஜனநாயக போராளிகளாக களத்தில் நின்றிடுவோம். துரோகத்தை வீழ்த்திடுவோம், இதில் வென்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.