அம்பானி, அதானி விவகாரம்: பிரதமரின் மவுனம் ஆபத்தானது - ப.சிதம்பரம்

பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அம்பானி, அதானி விவகாரம்: பிரதமரின் மவுனம் ஆபத்தானது - ப.சிதம்பரம்
Published on

சென்னை,

தெலுங்கானாவில் கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அம்பானி-அதானி என்று திரும்ப திரும்ப சொல்லி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர்கள் இருவரையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். தெலங்கானா பொதுமக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பெற்றார்கள்? கறுப்புப்பணம் எவ்வளவு பெறப்பட்டது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா? எனக் கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இச்சம்பவத்தை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வைத்து விசாரணை நடத்தி கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் டெம்போவில் நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். பிரதமரிடமிருந்து வரும் இந்த குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாக பார்க்க வேண்டும்.

சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது. கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? விசாரணைக்கான கோரிக்கைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மவுனம் ஆபத்தமானது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com