385 ஊராட்சிகளிலும்அமிர்த குளங்கள் உருவாக்கப்படும்

சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 385 ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் உருவாக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
385 ஊராட்சிகளிலும்அமிர்த குளங்கள் உருவாக்கப்படும்
Published on

சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 385 ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் உருவாக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமிர்த குளத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்திடவும், விவசாய தேவைக்கு போதிய அளவிலான நீர் கிடைத்திடவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அமிர்தகுளம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட சுதந்திர தின அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பொருட்டு குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்த குளங்களை உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள குளங்களை புனரமைத்தல், நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைக்கு வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 160 பணிகளுக்கும் ஊரக பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட 160 பணிகளில் 104 இடங்களில் புதிதாக அமிர்தகுளம் அமைக்கும் பணிகளும், ஏற்கனவே உள்ள 56 குளங்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

பூங்காக்களை உருவாக்கிட

இந்த பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உருவாக்கப்பட்ட குளங்களின் கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், பனை விதைகளை நடுதல் மற்றும் குளத்தின் அருகிலேயே பூங்காக்களை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடந்த சுதந்திர தினத்தன்று 36 புதிய அமிர்தகுளங்கள் உருவாக்கப்பட்டும், ஏற்கனவே உள்ள 15 குளங்களை புனரமைத்தும் பணிகள் முடிவுற்ற 51 அமிர்த குளங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள 109 பணிகளும் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் முழுமையாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

385 ஊராட்சிகளில்

மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 385 ஊராட்களிலும் அமிர்தகுளம் உருவாக்கப்படும். எனவே, தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள குளங்களை பொதுமக்களும் ஒன்றிணைந்து புனரமைக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினர்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகராஜன், கவுரி, வெள்ளாளபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கணேசன் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com