தமிழகத்தில் தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய மந்திரியுடனான கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது
Published on

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தமிழகத்தில் தயார் நிலையில் உள்ள மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி நிலை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 5.2 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்கள் நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

கூடுதலாக 11 லட்சம் தடுப்பூசிகள்

தமிழகத்தில் 1,33,246 சிறப்பு படுக்கை வசதிகளில், 8 சதவீத உள்நோயாளிகளும், 42 ஆயிரத்து 660 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளில் 10 சதவீத உள்நோயாளிகளும், 10 ஆயிரத்து 147 தீவிர சிகிச்சை படுக்கைகளில் 11 சதவீத உள்நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேல் 5.78 கோடி பேர் உள்ளனர். இதில் 89.83 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 67.30 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 தடுப்பூசிகள், அதாவது 6 சதவீத தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது. ஆனால் தற்போது வீணாக்கப்பட்டதை விடவும் 11 லட்சத்து 14 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 3 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரத்து 487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை (இன்று) 20-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மத்திய அரசுக்கு நன்றி

தமிழகத்தில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குள்ளான 77.34 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 31 ஆயிரத்து 187 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இறுதியாக கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் தமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்டு வரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் டாக்டர் சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com