விளையாட்டு மைதானத்திற்குள் திடீரென புழுதி பறக்க புகுந்த யானை - மாணவர்கள் ஓட்டம்


விளையாட்டு மைதானத்திற்குள் திடீரென புழுதி பறக்க புகுந்த யானை - மாணவர்கள் ஓட்டம்
x

மைதானத்திற்குள் யானை புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை, 9-வது மைல், கூவச்சோலை, விலங்கூர், பிதிர்காடு, சூசம்பாடி, முதிரக்கொல்லி, முக்கட்டி, சோலாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவை வாழை, தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நெலாக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நேற்று மாலை வழக்கம்போல் மாணவர்கள் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று புழுதி பறக்க மைதானத்துக்குள் திடீரென புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காட்டு யானை, மாணவர்களை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த அவர்கள் அங்கிருந்து சத்தம் போட்டவாறு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன் மூலம் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story