ஆன்லைன் மூலம் மணமகள் தேடிய என்ஜினீயர்: ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சத்தை சுருட்டிய பெண்

ரூ.23 லட்சத்தை சுருட்டி சென்ற பெண் குறித்து சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் மணமகள் தேடிய என்ஜினீயர்: ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சத்தை சுருட்டிய பெண்
Published on

கோவை,

கோவை சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல கிருஷ்ணன் (வயது37) தொழில் அதிபர். ஏற்கனவே திருமணமான இவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண், கோகுல கிருஷ்ணனை தொடர்பு கொண்டார். ரதி மீனா என்று அறிமுகம் செய்து கொண்டு தானும், திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் நட்பாக பழக தொடங்கினர்.

இந்தநிலையில் அந்த பெண் தான் ஒரு ஆன்லைன் செயலியை அனுப்புவதாகவும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கோகுல கிருஷ்ணனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கோகுல கிருஷ்ணன், அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.23 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.

ஆனால் அதன்பின்னர் அந்த பெண் தொடர்பு கொள்ளவில்லை. பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. அதன்பின்னர்தான் மோசடி செய்யப்பட்டதை என்ஜினீயர் கோகுல கிருஷ்ணன் உணர்ந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை சுருட்டி சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com