நகை கடை சுவரில் துளை போட்டு திருட முயன்ற என்ஜினீயர்

நகை கடை சுவரில் துளை போட்டு திருட முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
நகை கடை சுவரில் துளை போட்டு திருட முயன்ற என்ஜினீயர்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் பத்ரி (வயது 40). இவரது கடைக்கு மேல் உள்ள வீட்டில் சீனிவாசன் (45) என்பவர் வசித்து வருகிறார். 2-ந்தேதி இரவு நகைக்கடையை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு பத்ரி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் சுவர் இடிக்கும் சத்தம் கேட்டு கடைக்கு மேல் உள்ள வீட்டில் வசித்து வரும் சீனிவாசன் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார்.

திருட முயற்சி

இதனால் அவர் மாடியில் இருந்து இறங்கி கீழே வந்து பார்த்தார். அப்போது பத்ரியின் நகைக்கடை சந்தில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு கடையின் சுவரை இடித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை கண்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடையை பார்வையிட்டனர். அப்போது நகைக்கடை சுவரில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவில் துளை போட்டு திருட முயற்சி நடந்ததை கண்டுபிடித்தனர்.

கைது

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை பிடிக்க போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி கரூர் அருகே உள்ள மலையபுரத்தை சேர்ந்த ராஜபாண்டியன் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜபாண்டியன் போலீசில் அளித்து உள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

யூடியூப் பார்த்து...

நான் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து உள்ளேன். நூற்பாலையில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வேலை செய்து வருகிறேன். எனக்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் நான் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க எண்ணினேன்.

இதற்காக யூடியூப் சேனலில் திருடுவது சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்தேன். அதன்படி நகை கடையில் திருட முயன்றேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com