பட்டாசு தொழிலில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழிலில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அதே விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பூரண உடல்நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஆலை உரிமையாளர்களாலும், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் விபத்துக்களை அலட்சியமாக எதிர்கொள்ளும் அரசு நிர்வாகத்தாலும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, இனியாவது ஆபத்து நிறைந்த பட்டாசு தொழிலில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு அத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com