ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி டாக்டர் சிவக்குமார் 4-வது தடவையாக ஆஜர்

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி டாக்டர் சிவக்குமார் 4-வது தடவையாக ஆஜரானார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி டாக்டர் சிவக்குமார் 4-வது தடவையாக ஆஜர்
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் தனி டாக்டரான சிவக்குமார் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை 6 மணி நேரம் விசாரணை நடந்தது.

அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அவர் ஆணையம் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதனைதொடர்ந்து அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் மற்றும் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்வைத்த குறுக்கு விசாரணைகளுக்கும் உடன்பட்டார்.

டாக்டர் சிவக்குமார் ஏற்கனவே 3 முறை விசாரணை ஆணையத்தில் (ஒரு குறுக்கு விசாரணை உள்பட) ஆஜராகி இருக்கிறார். தற்போது அவர் 4-வது முறை ஆணையத்தில் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 பேரின் பட்டியல்

விசாரணை முடிந்து டாக்டர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை அனுமதிக்கப்பட்டதற்கு முன்பு, அவருக்கு என்னென்ன விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? எத்தனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள்? அவருக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் இன்றைக்கு என்னை விசாரணை ஆணையத்துக்கு ஆஜராக சொல்லியிருந்தார்கள்.

இதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த கிட்டத்தட்ட 22 பேரின் பெயர் விவரங்கள், சிகிச்சை விவரங்கள் குறித்து எனக்கு தெரிந்தவற்றை ஆணையத்திடம் தெளிவு படுத்தியிருக்கிறேன். அதுதொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குளுக்கோஸ் மானிட்டர்

வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

இன்றைக்கு மறு விசாரணைக்காக டாக்டர் சிவக்குமார் ஆஜரானார். ஜெயலலிதாவுக்கு 2014-ல் இருந்து 2016-ம் ஆண்டு வரை (அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் முன்பு) ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 22 டாக்டர்களின் பட்டியலை அவர் சமர்ப்பித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் கையில் 24 மணி நேரமும் சர்க்கரை அளவை குறிப்பிடும் குளுக்கோஸ் மானிட்டர் கட்டப்பட்டிருக்கும் என்ற விவரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கருவியில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளையும் அவர் ஆவணமாக தாக்கல் செய்தார். மேலும் 2014-ம் ஆண்டில் டாக்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் குரூப் பற்றியும், அதில் பகிரப்பட்ட மருத்துவ விவரங்களையும் அவர் தாக்கல் (ஸ்கிரீன் ஷாட் முறையில்) செய்தார்.

வெளிநாடு சிகிச்சை தொடர்பாக...

ஆணையம் எதையெல்லாம் கேட்கவில்லை என்று நாங்கள் கருதினோமோ (சசிகலா தரப்பு) அந்த கேள்விகளை குறுக்கு விசாரணையின்போது டாக்டர் சிவக்குமாரிடம் முன்வைத்தோம். விசாரணை ஆணையத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பத்திரிகையாளர் முன்னிலையில் இந்த விசாரணை நடந்தது. இதற்கு டாக்டர் சிவகுமார் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என்னவெல்லாம் பேசிக்கொண்டார்கள்? என்ற அந்த கலந்துரையாடல் விஷயங்கள் குறித்து கேள்விகள் முன்வைத்தோம்.

ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வது எப்போதாவது கட்டாயமாக தோன்றியதா?, என்று கேட்டோம். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்று அவர் பதில் அளித்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ரிச்சர்ட் பீலே போன்ற டாக்டர்கள் உங்களை அணுகி, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம், என்று ஆலோசித்தார்களா? என்று கேட்டோம். அப்படி யாரும் தன்னிடம் கேட்கவில்லை, என்று அவர் கூறிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com