தென்காசியில் நர்சிடம் நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியர் கைது

மொபட்டில் சென்ற நர்சை வழிமறித்து நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி வசந்தா (வயது 48). இவர் கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை மைப்பாறை கோவிலுக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென வசந்தா ஓட்டி வந்த மொபெட்டை வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.
உடனே வசந்தா தனது கைகளால் தங்கச் சங்கிலியை இறுகப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். அப்போது அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடி வந்தனர். இதனால் நகை பறிக்கும் முயற்சியைக் கைவிட்ட மர்மநபர், மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு வயல்வெளி வழியாகத் தப்பி ஓடினார்.
அவரை விவசாயிகளும் அப்பகுதி மக்களும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, திருவேங்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த கனகராஜ் மகன் பாண்டித்துரை (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கடன் தொல்லையால் அவதிப்பட்டதால் நகை பறிக்க முயன்றதாகக் காவலர்களிடம் தெரிவித்தார். அவரைக் காவலர்கள் கைது செய்தனர். பாண்டித்துரை ஏற்கனவே ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






