கும்பகோணத்தில், 12 பெருமாள் கருட சேவை

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில், 12 பெருமாள் கருட சேவை
Published on

கும்பகோணம்:

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

12 கருட பெருமாள் சேவை

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை நாளாகும் இதனையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று அட்சய திருதியையொட்டி 12 கருட சேவைக்காக கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரியதெருவில் உள்ள அகோபில மடம் வாயிலில் பிரமாண்டமான அலங்கார பந்தல் அமைக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதில் காலை 10 மணி அளவில் கருட வாகனங்களில் உற்சவ பெருமாள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி 12 பெருமாள் பொதுமக்களுக்கு காட்சியளித்தனர். இதில் சாரங்கபாணி சாமி, சக்கரபாணிசாமி, ராமசாமி, ஆதிவராகசாமி, ராஜகோபாலசாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சாமி உள்ளிட்ட 12 கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் காலை முதல், பகல் 1 மணி வரை அலங்கார பந்தலில் எழுந்தருளி அருள்பாலித்தனர். உற்சவ பெருமாளை ஒரே இடத்தில் கருட வாகனத்தில் பார்ப்பது மிகவும் அரிதான நிகழ்ச்சி என்பதால் இதனை காண கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் காலை முதல் குவியத் தொடங்கினர்.

போக்குவரத்து மாற்றம்

பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் பெரிய கடை வீதிக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு வழியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பெரிய தெருவில் பக்தர்களுக்கு மோர்,மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

இதற்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். கருட சேவைக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் காசுக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com