

ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் இருந்து விமானம் வந்தது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமதுசாதிக் (வயது 32), சென்னையை சேர்ந்த ஷேக் தாவூத் (33) ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எல்.இ.டி. விளக்குகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அதில் 12 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் 2 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்தும் தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது. 2 பேரிடம் இருந்தும் ரூ.63 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 750 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த இம்தியாஸ் அகமது (22), ராமநாதபுரத்தை சேர்ந்த நூருல்ஹக் (26) ஆகியோரும் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.25 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 716 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த கமால் (52) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.19 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். அந்த தங்கமும் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு 5 பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ரூ.1 கோடியே 8 லட்சத்து 79 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 14 கிராம் தங்கம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 5 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.