ஒன்றாக பயிற்சி பெற்ற வேலூர் கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்த பெண் போலீசார் --‘எம்.ஜி.ஆர்.தான் கடவுள்’ என உருக்கம்

தமிழ்நாட்டில் 1981-ம் ஆண்டு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் பயிற்சிபெற்று பணியில் சேர்ந்த பெண் போலீசார் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று வேலூர் கோட்டையில் சந்தித்தனர். அப்போது அவர்கள் எம்.ஜி.ஆர்.தான் எங்களுக்கு கடவுள் என்று கூறினர்.
ஒன்றாக பயிற்சி பெற்ற வேலூர் கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்த பெண் போலீசார் --‘எம்.ஜி.ஆர்.தான் கடவுள்’ என உருக்கம்
Published on

வேலூர்,

தமிழ்நாட்டில் கடந்த 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் முதல் முறையாக பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். 800-க்கும் மேற்பட்டோர் இரண்டாம்நிலை காவலர்களாக தேர்வுசெய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் வேலூர் கோட்டைக்குள் உள்ள திப்பு மகாலில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவுக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர். பெண் போலீசாரின் செயல்பாடுகளை பார்த்து அங்கேயே அவர்களை முதல்நிலை காவலர்களாக அறிவித்தார்.

பயிற்சி முடித்து அனைவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிநியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் படிப்படியாக சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், துணைபோலீஸ் சூப்பிரண்டு வரை பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் பணியில் சேர்ந்து 40 ஆண்டுகளாகிவிட்டது.

இதனால் அவர்களில் ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் ஓய்வுபெற்று விட்டனர். ஆனாலும் அவர்கள் தாங்கள் ஒன்றாக பயிற்சி பெற்ற வேலூரில் சந்திக்க முடிவு செய்தனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்து 160 பேர் 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வேலூர் கோட்டைக்கு வந்தனர். அங்கு தாங்கள் தங்கி பயிற்சி பெற்ற திப்பு மகாலிலேயே விழா நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற துணைபோலீஸ் சூப்பிரண்டு டோமினிக் சேவியோ தலைமை தாங்கி பேசினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கலந்துகொண்டவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

அதேபோன்று காஞ்சீபுரத்தில் அத்திவரதா 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருவதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்த தாங்கள் 40 வருடங்களுக்கு பிறகு சந்தித்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் எம்.ஜி.ஆர்.தான் தங்களுக்கு கடவுள் போன்று என்றும் அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர்.

முன்னதாக அவர்களுடன் பணியில் சேர்ந்து மரணமடைந்த போலீசாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனைவரும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com