அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்..!

அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது.
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்..!
Published on

திருப்பூர்:

அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழாவில் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் ( 9ம் தேதி ) நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடன்மர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை திரும்பியதால் இந்த வருடம் கடந்த 5-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 6- ம் தேதி சூரியசந்திர மண்டல காட்சிகளும், 7-ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்ன வாகன காட்சிகள் நடந்தது. 8. ம் தேதி புஸ்பவிமானம் கைலாசவாகன காட்சி நடந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 - நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வினாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரிவரதராஜப்பெருமாள் கருடவாகனத்திலும் எழுந்தருளி 63 - நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

அப்போது சிவகன பூதவாத்தியம் இசைக்கப்பட்டு கோவிலிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி வலம் வரும் வீதிகளில் வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூரம் குடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இன்று மாலை 4 மணிக்கு கற்பகவிருட்ச விழா, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி, யானை வாகன காட்சிகள் நடைபெறுகின்றன.

இதை தொடர்ந்து வரும் 11-ம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். 12-ம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து சிறிது தொலைவு இழுத்து நிறுத்தப்படுகிறது. 13-ம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து நிலை சேர்க்கப்படும்.

மேலும் 14-ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் வடம்பிடித்து இழுத்துநிலை சேர்க்கப்படுகிறது. 15-ம் தேதி வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது. 16-ம் தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17-ம் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ம் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் மயில்வாகன காட்சியும் நடை பெறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com