சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, 2023-2024-ம் ஆண்டில், மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம் மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள், சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்து, ராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அம்மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பி. விஷ்ணு சந்திரனுக்கு தங்கப் பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு வெள்ளிப் பதக்கமும், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கராவுக்கு வெண்கலப் பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையர் வே. அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com