ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம்: இன்று காலைக்குள் முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

ம.தி.மு.க., அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம்: இன்று காலைக்குள் முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார் ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கப்படவில்லை.

இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவசர வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பம்பரம் சின்னம் பொதுப்பட்டியலில் உள்ளதா, இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. ம.தி.மு.க., அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று (புதன்கிழமை) காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், 'கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க., வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளனர். அதனால், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com