நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

நாளை முதல் 5 நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Published on

திருச்செந்தூர்,

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட திருநாட்கள் தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மேலும், தைப்பூசம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி தைப்பூசத் திருவிழா வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலைமோதிய கூட்டம்

இதன் காரணமாக இந்தாண்டு மாலையணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் நேற்றும், நேற்று முன்தினமும் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். இதனால் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டம் நிரம்பியது. பக்தர்கள் வந்த வாகனங்களால் நேற்று நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com