காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்

விழுப்புரம் அருகே காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையிலேயே மாணவிக்கு, மாணவர் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ளது மாம்பழப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மாம்பழப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் 10-ம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்து வரும் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்தார். பலமுறை அந்த மாணவர் தன்னுடைய காதலை மாணவியிடம் வெளிப்படுத்தியும் மாணவி அதனை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் மாணவர் மனம்தளராமல் தொடர்ந்து அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். திருமண வயதை எட்டாத மாணவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்படியாவது மாணவியை வாழ்க்கை துணையாக கரம்பிடித்துவிட வேண்டும் என்று எண்ணினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளை முடிந்து பள்ளி வகுப்பறையில் மாணவ- மாணவிகள் அனைவரும் அமர்ந்திருந் தனர். அப்போது ஆசிரியர் இல்லாத நேரத்தில் அந்த மாணவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த தாலியை எடுத்து மாணவியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த மாணவியும் மற்றும் வகுப்பறையில் இருந்த மற்ற மாணவ- மாணவிகளும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த மாணவி அழுதுகொண்டே பள்ளியில் இருந்து வீட்டுக்கு ஓடினார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்களிடம், சம்பந்தப்பட்ட மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவனை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என்றுகூறி அவர்கள் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆத்திரம் தாங்காமல் ஆசிரியர்கள் சிலரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கல்வித்துறை அதிகாரிகள், அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த மாணவியின் கழுத்தில் இருந்த தாலி அகற்றப்பட்டது.

இன்னும் ஒரு மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் அந்த மாணவியை மட்டும் பள்ளிக்கு வருமாறு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பிரச்சினைக்குரிய அந்த மாணவனை பள்ளிக்கு வராமல் இருக்கவும், நேரடியாக தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதிக்கொள்ளுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com