பீகார் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இதுதான் பெண்களை பாதுகாக்கும் லட்சணமா? - அன்புமணி கண்டனம்

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அன்புமணி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை அடையாறு பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க வந்த அவரது கணவர், 2 வயது குழந்தை ஆகியோரை படுகொலை செய்ததுடன், இளம்பெண்ணையும் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது. அமைதியான நகரம் என்று பெயர் பெற்ற சென்னையை வாழத்தகுதியற்ற கொலைநகரமாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அடையாறு பகுதியில் முதலில் பீகார் இளைஞர் ஒருவர் மட்டும்தான் முதலில் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து வெளியான செய்திகள் திகில் படத்தின் காட்சிகளுக்கு இணையாக உள்ளன. பீகார் இளம்பெண்ணையும், அவரது கணவர் மற்றும் குழந்தைகளையும் படுகொலை செய்த அந்தக் கொடூரக் கும்பல், அத்துடன் நிற்காமல் மூவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றிருக்கிறது. இப்படி ஒரு கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய 48 மணி நேரத்திற்குள் இந்தக் கொடூரம் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று பெயர்பெற்ற மாநிலத்தி்ற்கு வாழ்வாதாரம் தேடி வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், குடும்பத்தையே கொலை செய்யும் நிலை நிலவுகிறது என்றால் தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடக்கிறது? என்று உலகம் காறி உமிழாதா?

இவ்வளவு மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழ்நாடுதான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று கூறுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நா கூசவில்லையா? திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் கஞ்சா வணிகர்கள்தான் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும்; திமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற அவர்கள் காத்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com