மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்

தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.
மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்
Published on

மக்கள் தொடர்பு முகாம்

தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில், ஒன்றிய கவுன்சிலர் கவிதா நந்தகோபால், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்பாபு, தாசில்தார் சரவணபாபு உள்பட அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்றார். அதன்பிறகு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மகப்பேறு நிதிஉதவி, மக்களை தேடி மருத்துவம், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் எந்திரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விலையில்லா தேய்ப்பு பெட்டிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் இடுபொருட்கள் வழங்குதல், தோட்டக்கலைத்துறையின் மூலம் காய்கறி விதைகள், மகளிர் திட்டத்தின் மூலம் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.6 கோடியே 94 லட்சத்தில் 1,061 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பிளாஸ்டிக் கழிவுகள்

முகாமில் கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், "விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளில் தேங்கி சுகாதாரக்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் குடிநீர் கிணறுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் மாசு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது குடிநீரை சில்வர் பாட்டில்களில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். விவசாயிகள் உழவன் செயலி மற்றும் இ-நாம் செயலியை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறமுடியும். மேலும் இணையவழி மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு வேளாண் துறை அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com