'தமிழ்நாட்டில் முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது' - சீமான்

இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் மாநாடு நடத்தவில்லை? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
'தமிழ்நாட்டில் முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது' - சீமான்
Published on

புதுக்கோட்டை,

மதுரை மாவட்டத்தில் வரும் 22-ந்தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதே சமயம், இது சங்கிகள் மாநாடு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். இந்நிலையில், இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியதாவது;-

"அவர்கள் ஒப்புக்கு பேசுகிறார்கள். நான் உளமாற முருகனை பற்றி பேசுகிறேன். நான் முருகனின் பேரன். நான் செய்வதற்கும், அவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பா.ஜ.க. நேற்று ஆரம்பிக்கட்ட கட்சி இல்லை. இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் அவர்கள் மாநாடு நடத்தவில்லை?

தமிழ்நாட்டில் முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது. அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களின் அரசியலுக்காக உத்தர பிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள், ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொடுவார்கள், தமிழ்நாட்டில் முருகனை தொட்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் என்று நம்மை நினைத்துவிட்டார்களா? பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை."

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com