

சென்னை,
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்தவகையில் நடப்பாண்டு தீபாவளியையொட்டி இயக்கப்படும் பஸ்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. பயணிகள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னையில் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையானது வருகிற நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.
எனவே தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரவும் அரசு உத்தரவுப்படி பாதுகாப்பான முறையில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் மாதவரம் புதிய பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்து 940 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் பயணம் செய்ய 30 சிறப்பு பஸ்களுக்கான முன் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டு இருந்தன.
ஆனால் நடப்பாண்டு நோய் தொற்று பரவில் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்வார்களா? என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பஸ்களில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவதற்கும் முன்பதிவை அரசு விரைவு போக்குவரத்து கழகம் நேற்று முதல் தொடங்கியது. இது ஆன்- லைன், கவுண்ட்டர்கள் மற்றும் செல்போன் செயலி மூலமாகவும் முன்பதிவு நடந்து வருகிறது. முதல் நாளே பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பயணிகள் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் தேவை எவ்வளவு என்று தெரியவரும்.
இது குறித்து முறையாக கணக்கிட்டு தீபாவளிக்கு எவ்வளவு பஸ்கள் இயக்கப்படும், சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்? கூடுதலாக முன்பதிவு கவுண்ட்டர்கள் எத்தனை திறக்கப்படும் என்ற கேள்விகளுக்கான பதிலை போக்குவரத்து துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.